தஞ்சாவூர்:அருமலைக்கோட்டை பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட்ட சுமார் 45க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை அருகே அறுமலைகோட்டை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறுமலை கோட்டை பகுதியில் உள்ள மதுபான கடை அருகே குடிபோதையில் இருந்தவர்கள் ஒருவரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தாசில்தார் அலுவலகம் என பல்வேறு இடங்களில் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் அவர்கள் கொடுத்த மனுவிற்கு இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரி நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடையை மூடும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார், டாஸ்மாக் மாவட்ட உதவியாளர் அருணகிரி, தஞ்சை தாசில்தார் அருள்ராஜ் ஆகியோர் போராட்டத்தை ஈடுபடுவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.