ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை கனமழை பெய்தது. தொடர் மழையால் ஜனவரி மாதம் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான உறைபனியால் தேயிலை மற்றும் காய்கறி பயிர்கள் சேதமடைந்தன. இதனால் கடந்த காலங்களில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், குளிர்காலம் முடியும் தருவாயில், நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் முதன்முறையாக காய்கறி விவசாயப் பணிகளை துவக்கியுள்ளனர்.
குறிப்பாக ஊட்டி அருகே முத்தோரை பாலாடா, கப்பத்தொரை, கள்ளக்கொரை ஆடா, கேத்தி பாலாடா, கொல்லிமலை போன்ற பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களை சமன் செய்து விதைகளை விதைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகலில் வெயில் கடுமையாக இருப்பதால், வயல்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறி பயிர்களை பாதுகாக்க பாசன பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை, மாலை வேளைகளில் மோட்டார், ஸ்பிரிங்லர் மூலம் கிணறுகளில் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
வரும் நாட்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்பதால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக காய்கறி பயிர்கள் கருகியதாக விவசாயிகள் தெரிவித்தனர். விளைச்சலும் பாதிக்கப்பட்டது. தற்போது, பனி குறைந்து வருவதால், பெரும்பாலான பகுதிகளில் முதல் பருவ விவசாய பணிகள் துவங்கி, விதைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், மீண்டும் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. எனவே பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம் என்றார்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தொழிலுடன் மலை காய்கறிகளான முட்டைகோஸ், பீன்ஸ், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர் உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூக்கல்தொரை, கேர்கம்பை, எலடா, கோடநாடு, கீழ்கோத்தகிரி, பில்லிகம்பை, காடாபெட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் முதல் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது.
எனவே, இப்பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறிகளை கடந்த மாதம் முதல் பெய்து வரும் பனிப்பொழிவு மற்றும் பகலில் கடும் வெயிலால் கருகாமல் பாதுகாக்க விவசாயிகள் தற்போது காலை, மாலை என இரு வேளை தண்ணீர் தெளித்து, விளைச்சலுக்கு ஏற்ப தண்ணீர் தெளித்து வருகின்றனர். இதனால் மலைப் பயிர்களை பனிப்பொழிவில் இருந்து பாதுகாத்து அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.