உச்ச நீதிமன்றம், சனாதனத்தை பற்றி பேசிய விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை நீடிக்கும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய வழக்குகள் பதிவு செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சனாதனம் குறித்துப் பேசிய விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் பதியப்பட்ட வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான மனுவை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது. இதில், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக உதயநிதி பேசியுள்ளார், அவர் பொறுப்பற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்” என்று வாதிட்டார்.
இதற்கு உதயநிதி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது, நீதிபதிகள் சொலிசிட்டர் ஜெனரலை அமைதியாக இருக்க வலியுறுத்தினர் மற்றும் “தொடர்ந்து புகார்களைப் பதிவு செய்து கொண்டே போக முடியாது” என்ற கருத்தை தெரிவித்தனர்.
துணை முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை நீடிக்கும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இன்றி, உதயநிதி மீது புதிய வழக்குகள் பதிவு செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னர், உதயநிதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது, அந்த வழக்கு சென்னைக்கு மாற்ற முடியவில்லை என்றாலும் கர்நாடகா மாநிலத்திற்கு மாற்ற முடியுமா என்பது தொடர்பாக இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 21 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.