வாஷிங்டன்/மாஸ்கோ: மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, உக்ரைனில் 30 நாட்களுக்கு எரிசக்தி உள்கட்டமைப்பு மீது எந்த தாக்குதல்களும் இருக்காது என்று புடின் உறுதியளித்துள்ளார். பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து ராணுவ உதவியும் செய்தன. இதற்கிடையில், இந்த போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்பும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார். இது தொடர்பாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது.

இதை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஏற்றுக்கொண்டார். ஆனால் ரஷ்யா அதை உடனடியாக ஏற்கவில்லை. ரஷியா போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால், பொருளாதார தடைகளை விரிவுபடுத்துவோம் என அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் கடந்த 14-ம் தேதி எச்சரித்திருந்தன. இந்நிலையில் நேற்று புடினும் டிரம்பும் போனில் பேசினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனைப் போன்று ரஷ்யாவும் 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால், புடின் அதை முழுமையாக ஏற்கவில்லை. மாறாக, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்து தாக்குதல்கள் மட்டுமே 30 நாட்களுக்கு நடைபெறாது என்று அவர் கூறினார்.
“உக்ரைன் 30 நாள் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டால், அது கூடுதல் படைகள் மற்றும் ஆயுதங்களைக் கட்டமைக்க அந்த நேரத்தைப் பயன்படுத்தும், மாறாக போர்களை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, உக்ரைனுக்கு இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை வழங்குவதை நிறுத்தினால் போர் முடிவுக்கு வரும்” என்று புடின் கூறினார். பேச்சு வார்த்தைகள் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “பேச்சுக்கள் சிறப்பாக நடந்தன” என்று கூறினார்.