புதுடெல்லி: நாடு முழுவதும் ஏழு மாநிலங்களின் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையான பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
பிஹார், மேற்குவங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், மேற்குவங்கம், உத்தராகண்ட், பிஹாரின் சில இடங்களைத் தவிர அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்ததது. தேர்தல் ஆணையத்தின் தகவல் படி தமிழகத்தின் விக்கிரவாண்டியில் அதிக அளவிலும், உத்தராகண்டின் பத்ரிநாத்தில் குறைந்த அளவிலும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் திரிணமூல் முன்னிலை: மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாநிலத்தின் ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். ராய்கஞ்ச் தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் கிருஷ்ண கல்யாண் முன்னிலையில் உள்ளார். அதேபோல், ரானாகட் தக்ஷினில் டிஎம்சி வேட்பாளர் முகுத் மணி அதிகாரி, பாக்தாவில் போட்டியிட்ட மதுபர்னா தாகுர், மணிக்தாலாவில் போட்டியிட்ட சுப்தி பாண்டே ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். உத்தராகண்டில் காங்., முன்னிலை: உத்தராகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் வேட்பாளர் லகபத் சிங் புடோலா முன்னிலையில் உள்ளார். மங்களூரு தொகுதியில் , காசி முகம்மது நிஜாமுதீன் முன்னிலை வகிக்கிறார்.
தமிழகத்தில் திமுக முன்னிலை: தமிழகத்தின் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் மாநிலத்தின் ஆளுங்கட்சியான திமுக-வின் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார். 7 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், திமுக 44,780 வாக்குகளும், பாமக 17,359 வாக்குகளும், நாதக 3556 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவில் 311 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக 24,421 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை: பஞ்சாப் மாநிலம் மேற்கு ஜலந்தர் தொகுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மொகிந்தர் பாகத் முன்னிலையில் உள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் காங்., முன்னிலை: இமாச்சலப் பிரதேசத்தின் தேக்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் மாநில முதல்வர் சுகுவின் மனைவியுமான கமலேஷ் தாகுர் முன்னிலை வகிக்கிறார், அதேபோல் மற்றொரு தொகுதியான நலகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவா முன்னிலையில் உள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் காங்., முன்னிலை: மத்தியப்பிரதேச மாநிலம் அமர்வாரா தொகுயில் காங்கிரஸ் கட்சியின் தீரன் ஷா சுகாராம் தாஸ் இன்வாடி முன்னிலை வகிக்கிறார். ஆனால், பாஜக வேட்பாளர் கமலேஷ் பிரதாப் ஷாவை விட வாக்கு வித்தியாசம் மிகவும் சொற்பமாகவே இருப்பதால் அங்கு எப்போது வேண்டுமானாலும் முன்னிலை நிலவரம் மாறலாம். பிஹாரில் ஜேடியு முன்னிலை: பிஹார் மாநிலத்தின் ருபாலி தொகுதியில ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கலந்தர் பிரசாத் மண்டல் 6,588 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
பாஜகவுக்கு சவால்: மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்து கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி பலம் பெற்றிருக்கும் பின்னணியில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் பலபரீட்சை இது. இந்த இடைத்தேர்தல், இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி உட்பட பல மூத்த அரசியல்வாதிகள் மற்றும் சில புதிய அரசியல்வாதிகளின் தலைவிதியை தீர்மானிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.