புதுச்சேரி: புதுச்சேரியில் ‘இந்தியன் 2’ படத்தை வரவேற்கும் வகையில், தியேட்டர் முன் ரசிகர்கள் 5 கிலோ கற்பூரம் ஏற்றி கொண்டாடினர். தொடர்ந்து, போலீசார் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து கற்பூரம் நட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று எச்சரித்தனர்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. புதுவை நகர் பகுதியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் படம் இன்று வெளியாகியுள்ளது.
திரையரங்குகள் முன்பு கமல் கட்-அவுட்டுகளுக்கும், பேனர்களுக்கும் அபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடினர். புதுவை அண்ணாசாலையில் உள்ள ரத்னா தியேட்டர் வாசலில் உள்ள இரும்பு ஸ்டாண்டில் 5 கிலோ கற்பூரத்தை ரசிகர்கள் எரித்தனர். இதனால் தீ மளமளவென எரிந்தது.
அருகில் இருந்த சினிமா பேனர் கற்பூரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. பல்கலைக்கழக போலீசார் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த ரசிகர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதையடுத்து இரும்பு ஸ்டாண்டை கீழே தள்ளிவிட்டு தீயை அணைத்தனர். மேலும், கற்பூரம் ஏற்றிய நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.