தஞ்சாவூர்: தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் பனிக்காலத்தை போல காலை வேளையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் மதிய நேரத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோடைகாலம் என்ற நிலை மாறி தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சுற்றுப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. காலை நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரியாத சூழ்நிலை உருவாகி இடையூறாக அமைந்துள்ளது. கடும் மூடுபனி போல் சாலையே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு உள்ளது.
இதனால் வாகன ஓட்டுனர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். பத்து மணி தொடர்ந்து மேல் மதிய நேரத்தில் வெயில் அதிக அளவில் வாட்டி எடுக்கிறது. இதனால் 12 மணி முதல் மூன்று மணி வரை மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் வெயில் நேரத்தில் தர்பூசணி, கிர்ணி பழம், நுங்கு, இளநீர் போன்ற உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழங்களை மக்கள் தேடிச்சென்று வாங்கி சாப்பிடுகின்றனர்.