புதுடில்லி: மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் வழங்கிய ஓர் அசாதாரண தீர்ப்பு மீது உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், “தண்டனையின் பாதியை அனுபவித்த பிறகே தண்டனையை நிறுத்த கோரிய மனு தாக்கல் செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது, இது சட்டத்திற்கே எதிரானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை பற்றியது. அவர் லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சில அபூர்வமான காரணங்களை முன்வைத்து மனுவை நிராகரித்தது.
அதன்பின் குறுகிய நேரத்திலேயே இரண்டாவது மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம், ஜாமின் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தண்டனையில் பாதி அனுபவித்த பிறகே மனு தாக்கலுக்கான உரிமை உண்டென்றும் கூறி அதையும் நிராகரித்தது.
இந்த வித்தியாசமான தீர்ப்பால் மனுதாரர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும், ஒன்பது மாதங்களாக சிறையில் இருக்கும் அந்த நபருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
அவர்கள் தீர்ப்பில், எந்தவிதமான சட்ட அடிப்படையும் இல்லாமல், தாமாகவே புதிய விதியை உருவாக்குவது சாத்தியமா என்று ம.பி. உயர்நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தனர். மேலும், இது அறிவுசார் நேர்மையின்மையை சுட்டிக்காட்டுவதாக கூறப்பட்டது.
1999-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சாதாரண குற்ற வழக்குகளில் தண்டனையை நிறுத்தி வைக்கலாம் என்றும், சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில்தான் ஜாமின் மறுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பல தீர்ப்புகள் இருந்தபோதிலும், கீழ்நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உள்ள தயக்கம் காரணமாக, ஒவ்வொரு வழக்கும் உச்ச நீதிமன்றத்தை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
இதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து, பணிச்சுமை பெருகி வருகின்றது. தற்போதுள்ள வழக்குகளில் சுமார் 40 சதவீதம் கீழ்நீதிமன்றங்களிலேயே தீர்க்கப்படக்கூடியவை என்றனர்.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும் எனவும், கீழ்நீதிமன்றங்கள் சட்டத்தின் மீதான தெளிவும், செயல்திறனும் காட்ட வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.