தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையால் கோடை சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கி மிதந்து அழுகி முளைக்கத் தொடங்கி விட்டன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 31,700 ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அறுவடை நேரத்தில் தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழையால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டு வயலிலேயே சாய்ந்துள்ளது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட கோடை நெல் பயிர்கள் முற்றிலும் சாய்ந்து வயலில் தேங்கி நிற்கும் மழை நீரில் மூழ்கிக்கிடக்கிறது. இதனால் நெல் பயிர்கள் அழுகியும், முளைக்கவும் தொடங்கி விட்டன என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ஏக்கருக்கு 30,000 வரை செலவு செய்து பாடுபட்டு சாகுபடி செய்தோம். அறுவடை நேரத்தில் பெய்த மழையால் நெற் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பயிர்கள் மழைநீரிலே கிடக்கிறது.
இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடியாதால் பயிர்கள் மழை நீரில் அழுகத் தொடங்கிவிட்டது. அறுவடை செய்தாலும் பாதிக்கு பாதி சேதம்தான். இதனால் செலவு செய்த தொகைக்கூட கிடைக்குமா என்று தெரியாத நிலை உள்ளது. கோடை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.