தஞ்சாவூர்: டிரோன் மூலம் 5 நிமிடத்தில் ஒரு ஏக்கரில் உரம் தெளிக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சியை அரசு வேளாண் கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்து பயிற்சி அளித்தார்.
தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டையில் தமிழக அரசின் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி சார்பில் அவ்வப்போது விவசாயிளுக்கு நவீன விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று தஞ்சை மாவட்டம் கருக்காடிப்பட்டி, பொய்யுண்டார் கோட்டை, ஈச்சங்கோட்டை, நத்தம் தெற்கு உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு சென்று டிரோன் மூலம் உரம் தெளிக்கும் பயிற்சி அளித்தனர். வேளாண் கல்லூரியின் முதல்வர் ஜெகன்மோகன் மற்றும் பூச்சியியல் துறை தலைவர் மதிராஜன் உள்ளிட்ட வேளாண் ஆராய்ச்சியாளர்கள் இந்த பயிற்சியை அளித்தனர்.
அப்போது அவர்கள் புடலங்காய், கத்தரிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட பந்தல் கொடி மூலம் சாகுபடி செய்துள்ள தோட்டங்கள் மற்றும் வெண்டைக்காய், தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி சாகுபடி செழித்து வளர டிரோன் மூலம் நுண்ணூட்ட உரம் தெளித்து பயிற்சி அளித்தனர்
இது குறித்து வேளாண் கல்லூரி முதல்வர் ஜெகன்மோகன் கூறுகையில, இன்றைய காலக்கட்டத்தில் விவசாய தொழிலாளர் பற்றாக்குறையை போக்கிட விவசாயிகளுக்கு டிரோன் மூலம் உரம் தெளிக்கும் தொழில் நுட்ப பயிற்சி அளித்து வருகிறோம். 5 நிமிடத்தில் ஒரு ஏக்கர் பரப்பு நிலத்திற்கு உரம் தெளிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் செலவு குறையும், பயிர்கள் செழித்து வளர்ந்து மகசூல் அதிகரிக்கும்.
விவசாயிகள் டிரோன்கள் வாங்கிட மானியம் வழங்கப்படுவதால் இன்னும் 5 ஆண்டுகளில் விவசாயிகள் வீட்டுக்கு வீடு டிராக்டர்கள் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வைத்திருப்பதுடன் டிரோன்களையும் வைத்திருப்பார்கள். அதன்மூலம் விவசாயிகள் செலவை குறைத்து கூடுதல் லாபம் ஈட்ட முடியும். என்றார்.