தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நெல் கொள்முதலில் தேக்கம், போர்க்கால அடிப்படையில் நெல்லை கொள்முதல் செய்து,மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் தொடந்து பெய்து வரும் கனமழையால் தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட, விவசாயிகளின்
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, கொள்முதல் செய்யப்படாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த பல நாட்களாக பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்த நெல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களேயே தேங்கிக் கிடப்பதால், புதிதாக கொள்முதல் செய்வதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்து, தன்னெழுச்சியாக பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்த நெல்லை உடன் அப்புறப்படுத்தவும், கனமழையினால் கொள்முதல் செய்யாமல் உள்ள விவசாயிகளுடைய நெல்லை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்து, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
மேலும், மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடை செய்த நெல் நனைந்து போய் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சேதத்தை கணக்கீடு செய்து இழப்பீட்டு நிவாரணம் வழங்கிடவும் தமிழ்நாடு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.