சென்னை: இன்று காலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் 23,56,623 நபர்களுக்கு, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் அதன் சூழ்பகுதிகள் (Belt Area) மற்றும் மாநிலத்தின் இதர நகர்ப்புரப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, இதுவரை 77,800 இணைய வழி (On-line) வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், சென்னை மற்றும் அதன் சூழ் பகுதிகளில் 15,393 இணையவழி பட்டாக்களும், இதர மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 62,407 இணையவழி பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன. நவீன மின்னணு நில அளவைக் கருவிகளைப் பயன்படுத்தி ‘நிகழ்நோ இயக்கவியல்’ (Real Time Kinematics) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மறு நில அளவைப் பணி, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் போன்ற அனைத்து சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், 35.33 லட்சம் நபர்கள் பயனடைந்து வருகின்றனர்.
அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும், இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5,463 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.