சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்.25) கொடைக்கானல் பயணம் ஆகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர், ஒரு மாத காலம் ஓய்வின்றி தேர்தல் களப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.
இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டார். அதன்படி அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை புறப்பட்டு சென்று, அங்கிருந்து சாலைமார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். அங்கு அவர் ஒரு வார காலம் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், கடந்த 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024-ல் மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும், ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று தங்கி ஓய்வெடுத்து விட்டு சென்னை திரும்பினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதேபோல் ஓய்வெடுக்க கொடைக்கானல் செல்கிறார். ஓய்வுக்காக செல்வதால், கட்சியினர் யாரும் முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை என்றும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.