சென்னை: தமிழ் வழி கல்வி இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகார்களை தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி வரை முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்களே இந்த இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள் என ஏற்கனவே உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியிருந்தன.
இந்நிலையில், போலி சான்றிதழ்கள் மூலம் அரசு பணிகளில் சேர்ந்தவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், விசாரணைக்கு தேவையான ஆவணங்களை மறைக்கும் பல்கலைக்கழக அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலி சான்றிதழ்கள் மூலம் பெற்ற பட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.