தஞ்சாவூர்:_ தஞ்சாவூர் மூலை அனுமார் கோவிலில் இன்று 6ம்தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற சனி தோசம் போக்கும் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மானால் கட்டப்பட்டது. தஞ்சையில் அனுமனுக்கு என கட்டப்பட்ட தனிப்பெரும் கோயிலாக மூலை அனுமார் கோவில் விளங்குகிறது.
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட நவகிரகங்களை தன் பலத்தால் விடுதலை ஆக்கியவர் அனுமார். இதன் பலனாக தனக்கோ தன் பக்தர்களுக்கோ யாதொரு தீங்கும் செய்யமாட்டேன் என நவகிரகங்களிடம் சத்திய பிரமாணம் பெற்றவர் மூலை அனுமார். இவரை வழிபடுபவர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கி ஆற்றலும் மேன்மையும் பெற்று செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றியை தரக்கூடியவர் என்பது வரலாறு.
இக்கோவிலை 1008 ராம நாமம் ஜெபம் செய்து வலம்வழிபட்டால் என்னென்ன பலன்கள் வேண்டி வழிபடுகின்றார்களோ அவற்றை எல்லாம் பெறலாம். பிரதி அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் மூலை அனுமாரை தரிசனம் செய்தால் எப்பேர்பட்ட கிரக தோஷங்களும் நீங்கி உயிருக்கு ஆபத்தான நோய்களும் குணமாகும் என்பது ஐதீகம். இக்கோவிலில் பக்தர்கள்சனிதோஷம் நீங்க வேண்டி 18 முறை வலம் வந்து சனி தோஷ நிவர்த்தி காணிக்கையாக ரூபாய் 18/ யை உண்டியலில் செலுத்தி சிதறு தேங்காய் உடைத்து செல்கின்றனார்கள்.
ஒவ்வொரு சனிப்பெயர்ச்சி அன்றும் மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். சனிதோஷம் நீங்க மூலை அனுமாரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று 6ம்தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி அன்று காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமமும் அதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் பரிகார அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை தரிசனம் செய்தார்கள். இதற்காக ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர் சத்யராஜ் மற்றும் கண்காணிப்பாளர் ரவி மற்றும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திரம் கைங்கர்யம் தொண்டர்கள் செய்து இருந்தார்கள்.