கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் துவங்கியுள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சுமுகமாகவும், பாதுகாப்பாகவும் தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோவில் நிர்வாகிகள் கூறியதாவது; சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 29 நாட்களில் 22 லட்சத்து 67 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.163.89 கோடி வருவாய் ஈட்டியுள்ளனர். சபரிமலை மண்டல மகரவிளக்கு நவம்பர் 14-ம் தேதி தொடங்கி 29 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 22,67,956 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட நான்கரை லட்சம் பக்தர்கள் கூடுதலாக வந்துள்ளனர். அதேபோல, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வருவாய் கிடைத்துள்ளது. மண்டல கால பூஜை முடிவதற்குள் மேலும் 15 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.