திருப்பதி: திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக திருநாமம் இடப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக நெற்றியில் நாமத்துடன் கோயிலுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் கோவில் வளாகத்தில் திருநாமம் இட பக்தர்களிடம் இருந்து 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதோடு ஒரு சில பக்தர்களை வலுக்கட்டாயமாக பிடித்து நாமமிட்டு அதிக பணம் வசூலிக்கின்றனர். இதனை தவிர்க்க ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி ஸ்ரீவாரி தேவா தொண்டர்களை நியமித்துள்ளது. திருப்பதி மலையில் உள்ள ஏடிசி பகுதியில் இந்த திட்டத்தை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதையடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக திருநாமம் இடப்பட்டது.
அதோடு திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு விரைவு திவ்ய தரிசனம் டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தங்கும் அறைகளுக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு எத்தனை அறைகள் உள்ளன, எப்போது அறைகள் கிடைக்கும் என்று விவரங்களை அறிவிப்புகள் மூலம் வெளியிட தேவையான ஏற்பாடுகள் செய்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.