திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் 15-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்கள் 24 மணி முதல் 36 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதற்கு பல்வேறு மாநில அரசுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து கேரள அரசு இந்த ஆண்டு அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியது. குறிப்பாக, 18 படிகளில் பக்தர்கள் ஏற்றும் பணி முடுக்கி விடப்பட்டது. இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டனர். அதேபோல், ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

இதனால் பெரிய குறைகள் ஏதுமின்றி நடப்பு சீசன் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் சபரிமலைக்கு 30 லட்சத்து 78 ஆயிரம் பேர் சென்றுள்ளனர். இந்த காலகட்டத்தில் முதன்முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். ஸ்பாட் புக்கிங் எனப்படும் உடனடி முன்பதிவு மூலம் நேற்று மட்டும் 22,769 பக்தர்கள் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.45 லட்சம் பேர் கூடுதலாக வருகை தந்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.