கொச்சி: மலையாள திரைப்பட கலைஞர்களின் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் மீண்டும் இணையப்போவதில்லை என நடிகை பார்வதி திருவோத்து திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பார்வதி திருவோத்து. ‘பூ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களைத் தேர்வு செய்து நடித்து, தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
நடிகையாக மட்டுமின்றி, திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பாகவும் பார்வதி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், மலையாள திரைப்பட கலைஞர்களின் சங்கமான ‘அம்மா’ அமைப்பு தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
அமைப்பு மீது நம்பிக்கை இல்லை
‘அம்மா’ அமைப்பு தற்போது முன்பு இருந்ததைப் போல தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என பார்வதி தெரிவித்துள்ளார். அனைவரையும் பாதுகாக்கும் ஒரு பெரிய குடும்பம் அல்லது பாதுகாப்பான அமைப்பு என்ற எண்ணம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது நடைமுறையில் நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீண்ட காலமாக பொறுப்பில் இருந்தவர்களின் அனுபவத்துடன் புதிதாக பொறுப்பேற்றவர்களை ஒப்பிட்டு, சில மாதங்களிலேயே அவர்களின் திறமையை கேள்வி எழுப்புவது சரியான அணுகுமுறையா என்றும் பார்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.
“மீண்டும் இணைய விருப்பமில்லை”
‘அம்மா’ அமைப்பு தனக்கு பாதுகாப்பு, ஆதரவு மற்றும் மரியாதை வழங்கும் இடமாக தற்போது தெரியவில்லை என்று கூறியுள்ள பார்வதி, எந்த அமைப்பிலும் இல்லாமலேயே தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
“எனவே, தற்போது எனக்கு எந்த அமைப்பிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் ‘அம்மா’ அமைப்பில் இணைய வேண்டும் என்ற விருப்பமும் இல்லை” என்ற வகையில் அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
அமைப்புகள் தொடர்பான விவாதங்களில் இருந்து விலகி, இனி தனது திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் பார்வதி தெரிவித்துள்ளார். தற்போது அவர் ‘பிரதம திருஷ்டிய குட்டக்கார்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
