சென்னை: பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ‘டிராகன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தன. குறிப்பாக, ‘டிராகன் 2’ படத்துக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகக் கூறி ஒரு போஸ்டரும் இணையத்தில் வைரலானது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஸ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளைஞர்களை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் கவனம் பெற்றது.
இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் படத்தின் முதல் ஆண்டு நிறைவையொட்டி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும், பிரதீப் ரங்கநாதனும் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தன.
இந்த நிலையில், தற்போது ‘டிராகன் 2’ தொடர்பாக ஒரு போஸ்டர் வெளியாகி, அதில் நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது.
ஆனால், அந்த போஸ்டர் அதிகாரப்பூர்வமானது அல்ல என்று ஏஜிஎஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. படக்குழுவால் வெளியிடப்படாத அல்லது அங்கீகரிக்கப்படாத தகவல்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்ற தகவல்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்குமாறும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ‘டிராகன் 2’ தொடர்பாக தற்போது பரவி வரும் நடிகர்கள் தேர்வு போஸ்டர் போலியானது என்பது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில், பிரதீப் – அஸ்வத் கூட்டணி மீண்டும் இணைவது தொடர்பான முன்பைய பதிவுகள் காரணமாக, ரசிகர்களின் எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.
