சென்னை: ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ரவீந்திர புல்லே இயக்கும் இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. இதில் கோண்டு பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதுவரை அவர் ஏற்று நடித்திராத வகையில் மிகவும் தீவிரமான கதாபாத்திரமாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் முக்கிய சிறப்பம்சமாக நீருக்கடியில் இடம்பெறும் சண்டைக்காட்சி அமைந்துள்ளது. இந்தக் காட்சிகளை படமாக்கியபோது ராஷ்மிகாவுக்கு வலது இடுப்பில் காயம் ஏற்பட்டதாகவும், இதனால் சில காலம் ஓய்வில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ள இப்படத்தின் புதிய போஸ்டரில் ராஷ்மிகா கையில் ரத்தக்கறை படிந்த ஈட்டியுடன் ஆக்ரோஷமாக தோன்றியுள்ளார்.
