சென்னை: 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ஜீவா, இயக்குநர் எம். ராஜேஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’.
காமெடி மற்றும் எனர்ஜி நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். இவர்களுடன் ‘பரிதாபங்கள்’ புகழ் சுதாகர், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ் என அழைக்கப்படும் பகவதி பெருமாள், துளசி, ராஜ் அய்யப்பா, அப்துல் லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கதையை எழுதி எம். ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஆசிஷ் ஜோசப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹாசினி பவித்ரா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் இப்படத்தை தயாரித்துள்ளார்.
படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
