கோவை: கோவை வி.எஃப்.எக்ஸ். நிறுவனம் மீது ஒப்பந்த தொகையை விட கூடுதலாக பணம் கேட்பதாக நடிகர் பார்த்திபன் போலீசில் புகார் செய்துள்ளார்.
படத்துக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்து தராமல் நடிகர் பார்த்திபனிடம் 42 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கோவை ஸ்டூடியோ நிர்வாகி மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
யோகிபாபு மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்து தாம் இயக்கிய டீன்ஸ் என்ற படத்துக்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் ஒப்பந்தத்தை கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றுக்கு பார்த்திபன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இப்பணிக்கு ஸ்டூடியோவின் மேற்பார்வையாளர் சிவபிரசாத்துடன் 68 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்த பார்த்திபன், முதல்கட்டமாக கடந்தாண்டு 42 லட்ச ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது.
குறித்த நேரத்தில் பணிகளை முடித்துத் தரவில்லை என்று கேட்ட போது முன்பு கூறியதைவிட கூடுதலாக 88 லட்ச ரூபாய் செலவாகும் என்றும் சிவபிரசாத் கூறியதாக கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸாரிடம் பார்த்திபன் புகார் அளித்தார்.
சிவபிரசாத் மீது மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.