சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்ட அஜித் குமாரின் மரணம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமாருக்கு, நிகிதா என்ற பெண் நகை திருட்டு குற்றச்சாட்டைத் தந்ததன் பேரில், வழக்கே பதிவு செய்யாமல் சில காவலர்கள் அவரை அழைத்து சென்று கடுமையாக தாக்கினர். தாக்குதலின் விளைவாக அஜித் குமார் உயிரிழந்தது, காவல்துறையின் அலட்சியத்தையும், அதிகாரத்தின் துஷ்பயன்பாட்டையும் வெளிப்படுத்தும் கொடூரச் சம்பவமாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் நேரடியாக குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கூறியதும், வீட்டு மனை பட்டா மற்றும் அரசு வேலை வழங்கியதாலும், அஜித் குமாரின் உயிருக்கு ஈடு இல்லை என்பது மிகுந்த வருத்தமுடனும் உணர்ச்சியுடனும் சமூகத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. இதற்கிடையே பல திரை பிரபலங்கள் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரண் தனது முகநூல் பதிவில் மிக கடுமையான விமர்சனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில், “ஐந்து ஆறு காவலர்கள் சேர்ந்து அடித்தே கொன்ற கொடுங்கொலை நெஞ்சை பதறவைக்கிறது, இரத்தம் கொதிக்கச் செய்கிறது” என தெரிவித்ததோடு, இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமாகக் கூறப்படும் நிகிதா என்ற பெண்ணை காவல்துறை விசாரித்ததற்கான தகவலே இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார். சமூகத்தில் அதிகாரம் உள்ளோருக்கு சட்டம் மந்தமாகவும், ஏழைகளுக்கு சட்டம் பாயும் வகையிலும் செயல்படுவதாக அவர் சாடியுள்ளார். மக்கள் அனைத்தையும் கவனித்து பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருப்பது நிச்சயம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவரது இந்த உருக்கமான பதிவுக்கு பரவலான ஆதரவு கிடைத்து வருகிறது. ப்ளூ சட்டை மாறன் இவரை “தமிழ் சினிமாவின் ஒரே ஆண்மகன்” என கூறியிருப்பதும், இந்தப் பதிவின் தாக்கத்தை நமக்கு உணர்த்துகிறது. கடந்த காலங்களில் நடந்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் போன்ற படுகொலைகளும் இப்போது அஜித் குமார் மரணமும் தமிழக காவல்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக மாறியிருக்கின்றன. இது போன்ற சம்பவங்களுக்கு சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் வலியுறுத்தல்.