சென்னை: அருமையான ருசி மிகுந்த கடையம் வத்தக்குழம்பு செய்முறை உங்களுக்காக. இதை பார்த்து செய்து குடும்பத்தினரின் பாராட்டுக்களை பெறுங்கள்.
தேவையான பொருள்கள்:
எலுமிச்சை – அளவு புளி
சின்ன வெங்காயம் -20
பூண்டுப் பற்கள் – 20
சுண்டைக்காய் வற்றல் -1/4 கப்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கடுகு + உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கருப்பட்டி -சிறிய துண்டு
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் -1/4 கப்
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க…
தனியா (கொத்தமல்லி விதை) – ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகு -2 டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
அரிசி – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -9
கறிவேப்பிலை – தேவையான அளவு
நல்லெண்ணெய் -3 டீஸ்பூன்
செய்முறை: புளியை கொதிக்கும் நீரில் ஊறவைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் துவரம் பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து நல்ல வாசம் வரும் வரை பொன்னிறமாக மாறியதும் மிளகு, சீரகம், தனியா வரையும் சேர்த்து கருகவிடாமல் வறுக்கவும்.
பின் கறிவேப்பிலை சேர்த்து மொறுமொறுவென வறுப்பட்டதும் ஒரு தட்டில் மாற்றி ஆறவைக்கவும். அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல் சேர்த்து லேசாக உப்பி வரும் அளவுக்கு வறுத்து கொள்ளவும்.
பின் எல்லா பொருட்களையும் ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் பொடித்த பின், 10 சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அடி கனமான மண் சட்டியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பின் சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
சுண்டைக்காய் வற்றல் பாதி அளவு வதங்கியதும் அதில் பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும். பூண்டு பற்கள் நன்கு வதங்கி செம்பு நிறம் வந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பூண்டு வதங்கியதும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேக விடவும்.
அவை பாதி வெந்ததும் புளிக்கரைசலை சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும். பத்து நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகும்போது கருப்பட்டி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து, மேலும் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, திறந்த நிலையில் மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டால் போதும்… கமகமக்கும் கடையம் வத்தக்குழம்பு தயார். இதே அளவுகளில் செய்து பார்த்தால் அசத்தலாக வரும்!