சென்னை: குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் பொட்டுக்கடலை மாவு அல்லது சோள மாவை பாலில் கலந்து குழம்பில் சேர்த்தால் உப்பின் அளவை சரி செய்யலாம்.
ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால். ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ரசத்தைக் கொதிக்க விட்டு மிளகு, சீரகத்தூள் போட்டு, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து ரசத்தை இறக்கினால் உப்பின் அளவு சரியாகி விடும். பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால், தேங்காயைத் துருவிச் சேர்த்தால் உப்பு குறைந்து விடும்.
கத்தரிக்காய், கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற பொரியல்களில் உப்பு அதிகமானால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்க்கலாம். மட்டர் பன்னீர், பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் ப்ரெஷ் கிரீம், சூடான பால் அல்லது வெண்ணெய் சேர்த்தால் காரம் குறைந்து சுவையாக இருக்கும்.
பொடி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால், அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம் வாணலியில் வறுத்து, தனியாகப் பொடி செய்து அதில் கலந்து விடவும். பிரியாணி காரமாக இருந்தால் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கிக் பிரியாணியில் கலந்தால் காரம் குறைந்து விடும்.
தோசை மாவில் உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகிவிடும்.