சென்னை: ஆரோக்கியமும், சத்தும் நிறைந்த நம் பாரம்பர்ய சிறுதானியத்தைக் கொண்டு எத்தனை வகை உணவுகள் செய்யலாம் தெரியுங்களா? அல்வா, கேசரி போன்ற இனிப்பு வகைகள், சாலட், சாட் வகைகள், பனீர் ரோல் போன்ற ஸ்நாக்ஸ் வகைகள். இவை மட்டுமல்ல, பிரியாணி, சிக்கன் 65, ராய்த்தா, கத்திரிக்காய் மசாலா போன்றவற்றிலும் சிறுதானியத்தைச் சேர்த்து சிறப்பாக்கலாம். இதோ உங்களுக்காக! வரகு சிக்கன் பிரியாணி எப்படி செய்யலாம் என்று பாருங்கள்.
தேவையானவை: வரகு அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), பச்சை மிளகாய் – 3 (கீறவும்), இஞ்சி – பூண்டு விழுது – 3 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – அரை கப், புதினா – அரை கப், கெட்டியான தேங்காய்ப்பால் – ஒரு கப், தண்ணீர் – 2 கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு,
ஊறவைப்பதற்கு: சிக்கன் – அரை கிலோ, கெட்டியான புளிக்காத தயிர் – ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
பிரியாணி மசாலா பொடிக்கு: சோம்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், பட்டை – 2 துண்டு, ஏலக்காய் – 4, அன்னாசிப்பூ – ஒன்று, கிராம்பு – 4.
வரகு அரிசியைக் கழுவி, 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். சிக்கனை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊறவைப்பதற்குக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துப் புரட்டி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிரியாணி மசாலா பொடிக்குக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் போட்டுப் பொடி செய்துகொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய்யைத் தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்துக் காய்ந்ததும், நறுக்கிய பெரிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கிளறவும். ஊறவைத்துள்ள சிக்கனை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வரை புரட்டிவிட்டு, தட்டுகொண்டு மூடி 15 நிமிடங்கள் குறைவான தீயில் வேகவைக்கவும்.
வாணலியில் உள்ள சிக்கன் மசாலாவை ஒரு குக்கருக்கு மாற்றவும். பின் அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, ஊறவைத்துள்ள வரகு அரிசியைப் போட்டு 5 நிமிடங்கள் கிளறி, அதைக் குக்கரில் உள்ள சிக்கன் கலவையுடன் சேர்க்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லித்தழை, புதினா, தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து ஒரு விசில்விட்டு, பிறகு தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். சிக்கன் வரகு பிரியாணி ரெடி!