சென்னை: எலும்புகளுக்கு நல்ல உறுதி அளிக்கக் கூடியது பிரண்டை. அதனால் இதற்கு ‘வச்சிரவல்லி’ என்ற வேறு பெயரும் உண்டு.
பிரண்டை எலும்பு மஜ்ஜையில் ‘ஆஸ்டியோபிளாஸ்ட்’ என்ற எலும்பு செல்களை உற்பத்தி செய்வதற்கு உதவி புரிகிறது. எலும்புக்கு அடர்த்தியையும், உறுதியையும் அளிக்கிறது.
பிரண்டையில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் கரோட் டினின் போன்ற சத்துகள் உள்ளன. இதில் உள்ள அனபாலிக் ஸ்பூராய்டு (இயற்கையான தாவர ஊக்கி) தசைகளில் வலி, வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது. எலும்பு தேய்மானம், முதுகு, இடுப்பு வலி, முதுகுத் தண்டுவட தேய்மானத்துக்கு பிரண்டை மிகச் சிறந்த மருந்து. இதில் ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பிரண்டை (தோல் சீவிய துண்டுகள்)- 100 கிராம்
உரித்த பூண்டு பற்கள்- 50 கிராம்
மிளகாய்த் தூள்- 4 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- சுவைக்கேற்ப
நல்லெண்ணெய்- 50 மி.லி.
செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, பிரண்டைத் துண்டுகள், புளி மற்றும் பூண்டை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடுகு மற்றும் வெந்தயத்தை வறுத்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு வதக்கி வைத்துள்ள பிரண்டை மற்றும் பூண்டினை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் வதக்கிய பிரண்டை மற்றும் மிளகாய் தூள், வறுத்து பொடித்து வைத்துள்ள கடுகு, வெந்தயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி பின்னர் ஆற வைத்து பறிமாறலாம். ஈரமில்லாத பாட்டிலில் எடுத்துக் வைத்துக்கொண்டு பயன் படுத்தலாம். பல மாதங்களுக்கு கெட்டுப்போகாது.