சென்னை: வீட்டில் எப்போதும் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு சமைத்து போர் அடிக்கிறதா? இன்று சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு சமைக்கலாம் வாங்க. அதிலும் குறிப்பாக செட்டிநாடு ஸ்டைலில் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து அசத்தலாம். இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட்டை தயிர், சாம்பார், ரசம் போன்றவற்றுடன் சாப்பிடுவதற்கு வேற லெவல் சுவையாக இருக்கும். அத்துடன் இதை செய்வதும் ரொம்ப சுலபம்.
தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு – ½ கிலோ
தக்காளி – 1
சீரகம் – ½ ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
வெங்காயம் – 1
புளி கரைசல்- 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் செட்டிநாடு மசாலா செய்வதற்கு மல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, வர மிளகாய் 4, தேங்காய், கருவேப்பிலை எல்லாம் சேர்த்து கடாயில் வறுத்து பின்னர் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் வைத்தால் போதும்.
விசில் அடங்கியதும், குக்கரைத் திறந்து நீரை வடிகட்டி, உருளைக்கிழங்கு தோலை உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி மற்றும் உப்பு சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
அடுத்ததாக வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். நீர் நன்றாக வற்றியதும் இறுதியில் வெல்லம், புளிசாறு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, 3 நிமிடம் கழித்து இறக்கினால் சூடான சுவையான செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி.