இன்றைய நாட்களில் பலரும் சர்க்கரையை தவிர்க்க முயற்சிக்கிறார்கள். அதன் மாற்றாக வெல்லம் எனும் இயற்கை இனிப்பை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் வளர்ந்து வருகிறது. தேநீருக்கே கூட சிலர் வெல்லம் சேர்த்து அருந்தும் பழக்கத்தில் இருக்கின்றனர். இனிப்பை முற்றாக தவிர்க்க முடியாதவர்களுக்கு இது சிறந்த மாற்றாக பார்க்கப்படுகிறது.
வெல்லம் என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு இயற்கை இனிப்பு. இதில் இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த உதவுவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் வெல்லம் நல்ல தேர்வாகும். இதில் சர்க்கரையைவிட குறைவான கலோரி இருப்பதால் இனிப்பு தேவையை வெல்லம் மூலம் ஈடு செய்யலாம். இதனால் அதிகமாக சாப்பிடும் எண்ணமும் குறையும்.
வெல்லம் செரிமானத்திற்கு சிறந்தது. உணவுக்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் நன்றாக இயங்கும். இது வாயு மற்றும் அகழ்வை குறைக்கும் தன்மை கொண்டது.
உடலில் தேங்கும் நீரை வெளியேற்றும் தன்மையும் வெல்லத்திற்கு உள்ளது. இரண்டு கப் நீரில் ஒரு ஸ்பூன் வெல்லம் மற்றும் இரண்டு ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து அரை கப் வரும் வரை கொதிக்கவைத்து குடித்தால், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் உப்புசம் குறையும்.
வெல்லத்தில் அதிக அளவு இரும்பு இருப்பதால், இது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. ஹீமோகுளோபின் அளவைக் கூட்டி, இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. மேலும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உயரும்.
மேலும் இதில் உள்ள மெக்னீசியம் குடலுக்கு வலிமை தரும். 10 கிராம் வெல்லத்தில் 16 மில்லிகிராம் மெக்னீசியம் இருக்கிறது. இது குடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
மொத்தத்தில், வெல்லம் என்பது சுகாதார ரீதியாக பல நன்மைகளை தரும், இயற்கையான இனிப்பு. ஆனால் அளவிற்கு மீறி எடுத்துக்கொள்ளாமல் சீராக பயன்படுத்தினால், இது உங்களுக்கு முழுமையான ஆரோக்கியத்தை வழங்கும்.