டெல்லி: டெல்லியில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்து டெல்லி அணியை வெற்றி பெற்றுள்ளது.
19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி, 5 முறை சாம்பியனான சென்னை அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணியில் நிலைத்து விளையாடிய சமீர் ரிஸ்வி 40 ரன்கள், ஆட்டமிழந்த திரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 155 என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி விளையாட தொடங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பவுண்டரி அடித்த நிலையில், 6 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். இறுதியில் சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.