புதுச்சேரி: புதுச்சேரி, கேரளா மற்றும் அசாமில் இன்று சட்டமன்ற தேர்தலுக்காக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. முதற்கட்டமாக, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் ஆகிய மூன்றிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
கேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 2.71 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய 30,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆளும் இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி கடுமையாக நிலவுகிறது.
கேரளாவின் சிறப்பம்சமாக 140 தொகுதிகளில் 130 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். குறிப்பாக 2.23 லட்சம் வெளிநாடு வாழ் வாக்காளர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டி இருந்தாலும், இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 30 தொகுதிகளிலும் போட்டியிடுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 9.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 209 இடங்கள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 2.5 கோடி வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் பங்கேற்கின்றனர். முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கப் போராடுகிறது. அவர்களுக்குப் போட்டியாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி களமிறங்கியுள்ளது. கௌரவ் கோகோய் போன்ற முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்தத் தேர்தல் தீர்மானிக்கவுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 5.3 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக வசதிகள், சக்கர நாற்காலிகள் மற்றும் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 160க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படை கம்பெனிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.