சென்னை: சென்னையில் இருந்து இலங்கை மற்றும் இலங்கையில் இருந்து சென்னை செல்லும் 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து தினமும் அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறது.
மீண்டும் அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் புறப்படும். அதேபோல் இலங்கையில் இருந்து மாலை 3 மணிக்கு சென்னை வரும் விமானம் மீண்டும் மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.
அதன்படி, தினமும் இயக்கப்பட்டு வந்த இலங்கை-சென்னைக்கு வரும் 2 விமானங்களும், சென்னை-இலங்கையில் இருந்து புறப்படும் 2 விமானங்களும் என மொத்தம் 4 விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்த விமானங்கள் இலங்கை செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்வது மட்டுமல்லாமல், இலங்கை வழியாக மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் போக்குவரத்து பயணிகளையும் ஏற்றிச் செல்லும்.
திடீரென இந்த 4 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகள் வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.