பெங்களூரு: கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தலக்காவேரி, பாகமண்டலா, மடிக்கேரி மற்றும் மைசூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணை கடந்த 30-ம் தேதி நிரம்பியதைத் தொடர்ந்து, மைசூர் மற்றும் மண்டியா மாவட்டங்களில் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 123.70 அடியாக உள்ளது.

மைசூர் மாவட்டம் எச்.டி. கோட்டையில் 19.52 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் தற்போதைய கொள்ளளவு 17.05 டி.எம்.சி. அணையிலிருந்து 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 47,590 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.