பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெங்களூருவை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் பிப்ரவரி 2-ம் தேதி சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், “பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான எனது 17 வயது மகளுக்கு உதவுமாறு எடியூரப்பாவிடம் கேட்டுக் கொண்டேன்.
பின்னர் அவர் எனது மகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்” என்று கூறிய அவர், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை ஆதாரமாக சமர்ப்பித்தார்.
இதையடுத்து எடியூரப்பா மீது கடந்த மார்ச் 14-ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், புகார் அளித்த பெண் மே 25-ம் தேதி திடீரென உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், 750 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
எடியூரப்பா முதல் குற்றவாளியாகவும், அவரது உதவியாளர்கள் அருண், ருத்ரேஷ், மாரிசாமி ஆகியோர் அடுத்தடுத்து குற்றவாளிகளாகவும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் 74 சாட்சிகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
எடியூரப்பா செய்த குற்றத்தை மறைக்க போலீசார் முயன்றதாகவும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்றும் சிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.