பெங்களூர்: பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் மோதி ஸ்கூட்டரில் சென்ற தம்பதி உயிரிழந்தனர்.
பெங்களூருவில் உயிர்காக்கும் வாகனமான ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து 2 உயிர்களை பிரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு பெங்களூரு நகரில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சிவப்பு சிக்னல் காரணமாக சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற 40 வயது இஸ்மாயில் மற்றும் அவரது மனைவி சமீன் பானு ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உடனடியாக போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.