டெல்லி: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72-ல் இருந்து 90 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பராமரித்து சாலை பயன்படுத்துபவர்களிடம் கட்டணம் வசூலித்து வருகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்தில் தற்போதுள்ள 72 சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 26,000 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 963 கி.மீ., நீளத்துக்கு 4 வழிச் சாலைகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன. ரூ.20,000 கோடி மதிப்பிலான இந்த பணிகள் அடுத்த 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 18 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.