உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, அரசு சுகாதார மையத்தில் நான்கு பெண்கள் செல்போன் டார்ச் லைட்டில் பிரசவம் செய்து, தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். உத்தரபிரதேசத்தின் பெரார்பரியில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் பிரசவத்திற்காக 4 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

ஆனால் சுகாதார மையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, மருத்துவர்கள் செல்போன் விளக்கு மூலம் பிரசவம் செய்தனர். அவர்கள் நான்கு பேரும் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இது ஊடகங்களில் செய்தியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி நடத்திய முதல் கட்ட விசாரணையில், எரிந்த மின்மாற்றி காரணமாக மருத்துவமனையில் 3 நாட்களாக மின்சாரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சுகாதார மையத்தில் ஜெனரேட்டர் மற்றும் டீசல் இருந்தபோதிலும் செல்போன் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை மருத்துவ அதிகாரி உறுதியளித்துள்ளார்.