புதுடில்லி: பூஜ்யம் மதிப்பெண்… தேர்வு மையம் வாரியாக வெளியிடப்பட்ட இளநிலை மருத்துவப்படிப்புக்கான, ‘நீட்’ நுழைவுத்தேர்வில், 2,250 தேர்வர்கள் பூஜ்யம் பெற்றுள்ளனர்.
நீட் நுழைவுத்தேர்வில், ஒவ்வொரு சரியான விடைக்கும் நான்கு மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது. தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது. இதை, ‘நெகடிவ்’ மதிப்பெண் என்று அழைக்கின்றனர்.
நீட் நுழைவுத் தேர்வில் சர்ச்சை எழுந்ததை அடுத்து, தேர்வர்களின் பெயர்களின்றி தேர்வு மையங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அதில், 2,250 தேர்வர்கள் பூஜ்ஜியம் பெற்றுள்ளனர். 9,400 பேர் நெகடிவ் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ள ஜார்க்கண்டின் ஹஸாரிபாக் மையத்தில் பூஜ்ஜியத்திற்குள் குறைவான மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
அதே போல, 2,321 தேர்வர்கள், 720க்கு 700 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்கள், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 276 நகரங்களில் உள்ள 1,404 மையங்களில் தேர்வு எழுதியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கான பயற்சி மையங்களில் பயிற்சி பெறாதவர்கள்.
நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு புகழ்பெற்ற ராஜஸ்தானின் சிகார் நகர மையங்களில் தேர்வு எழுதிய 2,000 பேர் 650க்கு கூடுதலான மதிப்பெண்ணும், 4,000 பேர் 600க்கு கூடுதலான மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.
முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.