கேரளா: இங்கேயே வாழ்ந்து இறக்க விரும்புகிறேன் என்று கேரளாவில் இருந்து வெளியேற மறுக்கிறார் பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற முதியவர் ஒருவர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்கானில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.
கேரள மாநிலத்தில் 104 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இவர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியை சேர்ந்த ஹம்சா (வயது 79) என்பவரும் ஒருவர். குடும்பத்துடன் வசிக்கும் இவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோழிக்கோடு போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த ஹம்சா, நான் பிறந்த இடம் இது தான். இங்கேயே என் இறுதி மூச்சை விட விரும்புகிறேன் என்றார். கேரளாவில் பிறந்த ஹம்சா, கடந்த 1965-ம் ஆண்டு வேலை தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். கராச்சியில் தனது சகோதரருடன் கடை நடத்திய அவர், 1972-ம் ஆண்டு வங்கதேச விடுதலை போருக்கு பிறகு இந்தியா திரும்ப, பாகிஸ்தான் குடியுரிமையை பெற்றாராம்.
2007-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து கேரளா திரும்பிய அவர், அதன்பிறகு இங்கேயே வசித்து வந்துள்ளார். இவர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த போதும் அது வழங்கப்படவில்லை.
அவரது நீண்ட கால விசா காலாவதியான நிலையில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின் படி ஹம்சா கேரளாவில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதைய நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.