அசாம்: அசாம் மற்றும் குஜராத் பகுதிகளில் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஆறரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரம்மபுத்திரா உள்ளிட்ட 8 ஆறுகளில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
திப்ரூகர் மாவட்ட நீதிமன்ற வளாகம், வனத்துறை அலுவலகத்தை சுற்றிலும் தண்ணீர் குளம் போன்று தேங்கியுள்ளது. வெள்ள பாதிப்பால் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், தேவையான இடங்களில் மீட்பு பணி நடைபெற்று வருவமதாகவும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இதே போன்று குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.