ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தம், பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச நிர்வாகத்தை மேம்படுத்துவது தொடர்பான கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக உரையாற்றியுள்ளார். இதற்கான பதிலடி அளித்த இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் கூறியதாவது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் எப்போதும் இந்தியாவிற்கு பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும் என்பதைக் அவருக்கு நினைவுபடுத்துவதாக அவர் கூறினார்.
பாகிஸ்தான் பரப்பும் பொய் பிரசாரம் எப்போதும் உண்மையான நிலையை மாற்ற முடியாது என அவர் தெரிவித்தார். காஷ்மீர் மக்கள் தங்களின் விருப்பத்தை தெளிவாகவும், உரக்கவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைப் போல் அல்லாமல், ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வலிமையாகவும், துடிப்பாகவும் உள்ளது.
பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் அவர் கூறினார். பயங்கரவாதத்தை எந்த அரசியலும் நியாயப்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளை சீர்திருத்த வேண்டும் என்றும், ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுபடுத்தி, அதில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.