புதுடெல்லி: ஈஷா யோகா மையத்துக்கு வழங்கப்பட்ட காரண அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் முகுல் ரோத்தகி, சபரீஸ் சுப்பிரமணியன் ஆகியோர், ‘இந்த விவகாரத்தில் 600 நாட்களுக்கு பிறகு மேல்முறையீடு செய்யப்பட்டது.
எனவே, கூடுதல் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் கட்டுமான விதிகள் மீறப்படுவதை புறக்கணிக்க முடியாது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். ஆனால், விதிகளுக்கு முரணான கட்டடங்களை இடிப்பது போன்ற நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படாது.

முதலில் உரிய விசாரணை நடத்தப்படும். ஏனெனில், தவறு செய்பவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக் கூடாது என்பது அரசின் கொள்கையாகும்,” என்றனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம். எனவே, விதிகளை மீறினால் எந்த சலுகையும் வழங்க முடியாது. சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக கூறப்படும் வழக்கில் உயர்நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. அதில் நாம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஈஷா யோகா மைய காலத்தில் கட்டப்படும் எந்த கட்டுமானமும், மாநில அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்,” என, தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.