டெல்லி: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கபில் சிபல் நேற்று கூறியதாவது:- காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் வெறும் பைத்தியக்காரத்தனமான செயல் அல்ல. இது ஒரு அரசின் (பாகிஸ்தான்) ஆதரவுடன் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவித்து, நமது நாட்டின் சட்டப்படி தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் நடவடிக்கையை தயக்கமின்றி முழுமையாக ஆதரிக்கிறேன். எதிர்க்கட்சிகளும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். பயங்கரவாதிகள் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியை நல்ல திட்டமிடலுடன் தேர்வு செய்துள்ளனர்.

ஏனெனில் அந்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியாது. குதிரை மூலம் மட்டுமே செல்ல முடியும். உள்ளூர் மக்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, தாக்குதல் நடத்தினால் பாதுகாப்புப் படையினர் வருவதில் தாமதம் ஏற்படும் என்பதை அறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல், சுற்றுலா பயணிகளை, ஆண்களை தனித்தனியாக அழைத்து சென்று சுட்டுள்ளனர்.
எனவே, இந்த சம்பவம் தற்செயலானதல்ல, நன்கு திட்டமிடப்பட்ட செயல். காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் சமீபத்தில் கூறியிருந்தார். அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதன் மூலம் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.