புதுச்சேரி: காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் மீனவர்கள் ஒரு வாரமாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என நாளுக்கு நாள் இவர்களின் போராட்ட முறைகள் மாறி வருகின்றன. இந்நிலையில் இன்று மதியம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மீனவர்கள் மட்டுமின்றி, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள ஐஸ் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இன்றி வீட்டிலேயே தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மீன் வியாபாரம் சுமார் ரூ. நாளொன்றுக்கு 1 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.