பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நிதிஷ் ரானே சமீபத்தில், “கேரளாவில் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துப் பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள். பாகிஸ்தானில் இந்துக்கள் அதே வழியில் நடத்தப்படுகிறார்கள். தீவிரவாத அமைப்புகளின் ஆதரவு கிடைத்ததால் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
கேரளா ஒரு மினி பாகிஸ்தான் போன்றது. அதனால்தான் அங்கு ராகுல் காந்தியும், பிரியங்காவும் வெற்றி பெற்றனர். தீவிரவாத அமைப்பை ஆதரிக்கும் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நிதிஷ் ரானேவின் பேச்சுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்-பேஜ் பதிவில் கூறியிருப்பதாவது:-
கேரளாவை மினி பாகிஸ்தான் என்று மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதிஷ் ரானே கூறியது மிகவும் தீங்கானது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கத்தின் கோட்டையாக விளங்கும் கேரளாவுக்கு எதிராக சங்பரிவார் நடத்தும் வெறுப்புப் பிரச்சாரத்தை இது போன்ற சொல்லாடல்கள் பிரதிபலிக்கின்றன. கேரளா மீதான இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, சங்பரிவாரத்தின் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.