திருவனந்தபுரம்: நாளிதழ்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக் கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் ஆலுவா நகராட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் மலையாள மனோரமா நாளிதழ் மற்றும் அதன் ஆசிரியர் மற்றும் நிருபர் மீது ஆலுவா குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த குற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி மலையாள மனோரமா நாளிதழ் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.பதாருதீன் உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை. நாட்டின் அன்றாட நிகழ்வுகள் மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்கு மகத்தானது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் பிரிவு 500ன் கீழ் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தேவையற்ற அவதூறு வழக்குகள் தொடர்வது, பத்திரிகை சுதந்திரத்தையும், செய்தி அறியும் மக்களின் உரிமையையும் மீறுவதாகும். இந்த வழக்கின் மூலம் கீழ் நீதிமன்றங்களை எச்சரிக்க இதுவே சரியான தருணம்.
விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் குறிப்பாக குற்றவியல் நடுவர்கள், பொதுவாக செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு குற்றச்சாட்டுகளை கருத்தில் கொள்ளும்போது எதிர்காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இந்நிலையில், பெண் நகராட்சி கவுன்சிலர் குறித்து அறிக்கை வெளியிட்ட மலையாள மனோரமா, அதன் ஆசிரியர் மற்றும் நிருபர் மீது ஆலுவா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு தேவையற்றது என ரத்து செய்யப்படுகிறது.
பத்திரிகை சுதந்திரத்தை முடக்குவது கும்பல் ஆட்சியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகக் கோட்பாடுகளின் சமநிலையைப் பேணுவதற்கு, பத்திரிகைச் சுதந்திரமும், நாட்டின் முக்கிய முன்னேற்றங்களை அறியும் மக்களின் உரிமையும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். பத்திரிக்கை சுதந்திரத்தை தடை செய்வது தனிப்பட்ட கும்பல் ஆட்சிக்கு வழிவகுக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.