குஜராத்: கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடியை அணிந்து, அயோத்தி ராமா் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞா் கைது செய்யப்பட்டாா். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, புகைப்படம் மற்றும் விடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத்தின் வதோதராவைச் சோ்ந்த ஜனி ஜெய்குமாா் என்ற இளைஞா், அயோத்தி கோயிலுக்கு திங்கள்கிழமை கருப்புக் கண்ணாடி அணிந்து வந்தாா். தான் அணிந்திருந்த நவீன கருப்புக் கண்ணாடியில் பொருத்தியிருந்த சிறு கேமரா மூலம் கோயில் வளாகத்தில் படம்பிடித்துக் கொண்டிருந்த அவரை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலா்கள் கைது செய்தனா்.
ராமா் கோயிலுக்கு செல்லும் பாதையில் பல இடங்களில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், அனைத்தையும் கடந்து கோயில் வளாகத்தின் சிங்க வாயில் வரை ஜெய்குமாா் வந்துள்ளாா்.
குஜராத்தைச் சோ்ந்த தொழிலதிபா் என கூறப்படும் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அதிகாரிகள், அந்த நபா் அணிந்திருந்த கருப்புக் கண்ணாடியின் மதிப்பு ரூ.50,000 இருக்கும் என்றனா்.