போபால்: ம.பி., மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹித் ஆர்யா, ஓய்வு பெற்று மூன்று மாதங்களுக்குள், பா.ஜ.க,வில் இணைந்துள்ளார். ம.பி.,யில் மாநில உயர் நீதிமன்ற இந்தூர் கிளை நீதிபதியாக பணியாற்றிய ரோஹித் ஆர்யா, கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். மூன்றே மாதங்களில் பாஜகவில் சேர்ந்தார்.
தலைநகர் போபாலில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற குற்றவியல் சட்டங்கள் குறித்த மூன்று கருத்தரங்குகளில் அவர் கலந்து கொண்டார். பின்னர் பாஜகவில் இணைந்தார். அவரை மாநில பொறுப்பாளர் ராகவேந்திர சர்மா வரவேற்றார்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டில், பெண்ணுக்கு எதிரான குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கிய விவகாரத்தில் ரோஹித் ஆர்யா மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டது. இதையடுத்து ஜாமீனை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் ஜாமீன் மனுக்களை கையாள்வது தொடர்பாக கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.
நீதிபதி ஆர்யா, 62, 1984ல் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டார்.இதையடுத்து, 2003ல், ம.பி., ஐகோர்ட்டில், மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2013ல் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2015ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு, 2024 ஏப்ரலில் ஓய்வு பெற்றார்.