கார்கில்: “பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது பாகிஸ்தான். இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம்,” என, பிரதமர் மோடி கூறினார்.
கடமை
திராஸில் உள்ள போர் நினைவிடத்தில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் என்றும் கடமைப்பட்டுள்ளது. 1999ல் கார்கில் ராணுவ வீரர்களை சந்தித்த அனுபவம் எனக்கு கிடைத்தது. கார்கில் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம்.
பதிலடி
பாகிஸ்தான் தனது தவறுகளில் இருந்து இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. நாடு பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு, பயங்கரவாதிகளை பின்னால் இருந்து இயக்குகிறது. அவர்களால் இந்தியாவை வெல்ல முடியாது. எந்த தீவிரவாத சவால்களும் தோற்கடிக்கப்படும்.
தீவிரவாதிகளின் சதியை வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். பயங்கரவாதத்தை தூண்டுபவர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம். பயங்கரவாதத்தின் அனைத்து முயற்சிகளையும் இந்தியா முறியடித்துள்ளது. எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.
காஷ்மீர்
370 ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீர் வளர்ச்சி கண்டுள்ளது. காஷ்மீரில் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சியடைந்து வருகிறது. காஷ்மீர் புதிய எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறது. பல தசாப்தங்களுக்குப் பிறகு திரையரங்கு திறக்கப்பட்டது. லடாக்கில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அரசியல்
எதிர்க்கட்சிகளால் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். ஓய்வூதியத் தொகையைச் சேமிக்க அக்னிவீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.